ல்தகா சைஆ
#கழுத
காதலிக்க ஆசை
காதலர்கள் சங்கம் என்னையும் உறுப்பினராக்க வேண்டும்
காதல் என்னை பரிசீலிக்க வேண்டும்
கனவின் கனவாக வேண்டும் என் காதல்
வார்த்தை பஞ்சத்தால் உதடுகள் தத்தலிப்பினும்
இருவர் கண்களும் பல்லாயிரம் மொழிகளை உருவாக்க வேண்டும்
யாரும் கண்டிராத என் அழகின் ஆழம்
அவன் ஆள வேண்டும்
பத்து விரல்கள் ஐந்தாக மாறும் வேலை
என் நாணங்கள் நாண்டுக்கொள்ள வேண்டும்
அவன் மூச்சுக்காற்றுக்குள் பல முத்தங்கள் ஒளிந்து கொண்டு
என்னை துரத்த வேண்டும்
காத்திருந்து பெற்ற காதலை
சிலேடையில் சிலேடையாக்க வேண்டும்
பேணா முள்ளை பதம் பார்க்க வேண்டும்
பலமுறை அணிந்த ஆடை எனினும்
துகிலுரியப்போகும் கள்வனை எண்ணிக்கொண்டு
ஓயாமல் மாற்ற வேண்டும்
காவியக் காதலன்கள் வேண்டாம்;பேரழகனும் வேண்டாம்
எனக்கென ஒருவன் ;எனக்காய் வேண்டும்
காதல் கோயில்களில் எங்கள் பாதங்கள் முத்தமிட வேண்டும்
இரட்டைப்படை எண்களாய் அல்ல;ஒற்றை படை எண்ணாய்
பேருக்காக காதல் செய்த பாவிகள் பலருண்டு
நான் என் பேருக்காய் காதல் செய்ய வேண்டும்
ஆம்,என் பெயரை துரத்தி வரும் பெயர் அதுவாக வேண்டும்
சூரியனும் வேண்டாம்;சந்திரனும் வேண்டாம்
இப்புவியும் வேண்டாம்; எப்புவியும் வேண்டாம்
ஒரு புள்ளி வேண்டும்
நெருக்கம் எங்கள் தாயகமாக வேண்டும்
அவன் வருமுன் இருந்த தனிமைகள்
காதல் சல்லடையில் சற்றே வழுக்கிவிழ வேண்டும்
எங்கள் தனிமைகள் மட்டும் தேங்க வேண்டும்
என் அளவற்ற ஆசைகளின் முன்னோட்டம் இது
காதல் தெய்வங்களே,
என்னவன் எங்கோ இருக்க
அவனவள் இங்கிருக்க
காலத்தை சீக்கிரம் கடத்தி விடு
முடிந்தால்,எம் இருவரையும் கடத்திவிடு
உம் உலகத்திற்கு
No comments:
Post a Comment