Tuesday, 10 July 2018

#பதிவுகள்

#4G
#மாயாவி

அறிவியலானது நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அணுவையும் துளைத்துவிட்டார்கள். அதனூடே எழுகடலையும் விரைவில் புகுத்திவிடுவார்கள். 'இமாலய வளர்ச்சி' என்பதனையெல்லாம் தாண்டி இன்னதென இயம்பவியலாத் தூரம்வரை சென்றுவிட்டார்கள். எனினும், உயரச் செல்லச் செல்ல உறவுகளும் அவற்றைப் பின்னிப் பிணைக்கின்ற உணர்வுகளும் வெறும் பிம்பங்களாகவே நமக்குப் தென்படுகின்றன. தகவல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அபரிமிதமானவை. அன்றைய கிரகாம் பெல்லின் கண்டுபிடிப்பு, இன்று சிறியதும் பெரியதுமாய் அனைவரது கைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து செங்கல்பட்டு பக்கம் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் இன்னும் வளரணும் ப்ரோ! பெருந்துறையிலிருந்து பென்னிசில்வேனியாவில் வசிக்கும் மாமன் மகள் மட்டுவார்க்குழலியிடம் நொடிப்பொழுதில் பேசிவிடலாம் டூட். (அடக் கடவுளே! AIRTEL 4G பொன்னுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை). தூதனுப்பிக் காதல் வளர்த்ததெல்லாம் நலதமயந்தியோடு போய்விட்டது. இன்றைய நகுலும் தன்வியும் Whatsapp Facebook Imo Twitter Skype Hike என்று நித்தமும் காதல் காவியம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். கலகலகலவென மணியெழுப்பிய தொலைபேசிகள் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய்த் தங்கள் அந்திம காலத்தை எண்ணி மௌனித்திருக்கின்றன. அன்று "அக்கரைல இருக்கிற அக்காவுக்கு போன் போட்டுத் தாடா கண்ணு", என்று பாட்டிமார்கள் கேட்டிருப்பார்கள். நாமும் ஸ்டைலாக ரிசீவரைக் காதில் வைத்து பட் பட்டென்று நம்பர் பேடை தட்டியிருப்போம். பீப் சத்தம்(!) வந்தவுடன் பாட்டியிடம் நீட்டியிருப்போம்.( ஹலோ துபாயா? பிரதர் மார்க் இருக்காரா? - வடிவேலு தொனியில்). இன்று அதே பாட்டி 'What's up dude?' என்று கேட்பது பரிணாம வளர்ச்சியின் பாதி நிலை. சற்று நினைத்துப்பாருங்களேன்... அப்பொழுதெல்லாம் தொலைபேசி ஓசை கேட்டவுடன் சிட்டாய்ப் பறந்திருப்போம், முதல் ஆளாய்ப்போய் எடுக்க. "கண்ணு, சித்திக்கு ஒரு  போன் போடு", என்று அம்மா சொல்லும் போதெல்லாம் நாம் சமத்தாய்ச் செயல்பட்டிருப்போம். அதுவே அம்மா திட்டியிருந்தாலோ, அப்பா கேட்ட பொருளை வாங்கித்தர மறுத்திருந்தாலோ, அருகிலிருக்கும் தொலைபேசி மணிக்கணக்காக மணியடித்தாலும் எடுத்திருக்க மாட்டோம். "அந்த ஃபோனத்தான் எடேன்டா...", என அம்மா சத்தம் போட்டால், "வந்து எடுக்கிறது?!?" என்ற பாணியில் ஹாயாக அமர்ந்திருப்போம். எத்துனை எத்துனை தொலைபேசி எண்களை நினைவில் வைத்திருப்போம்? மேலத்தெரு அண்ணாச்சி, சூரியம்பாளையத்து அத்தை, வடப்புதுப்பட்டிப் பெரியம்மா, ஆனங்கூர் ஆஸ்ப்பத்திரி என்று அனைவரது எண்களையும் நினைவில் வைத்திருப்போம். இன்றைய பொடிசுகள் தாய்தந்தையர் எண்ணைக்கூட தத்தமது i-phoneஐப் பார்த்தே கூறுகின்றன. விஞ்ஞானமாம் வளர்ச்சியாம். Two drops of tears for you guys...அப்பொழுதெல்லாம் சிலரது தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருப்போமே? தொலைபேசி ஒலி கேட்கும் போதெல்லாம் நமக்கானவர்களாக இருப்பார்களோ என்று நாணமும் அச்சமும் கொண்டு, அவை இருபாலரின் பண்பும்தான் என்று உணர்ந்திருப்போமே! இன்றோ, 'அவன்தான்டி', 'மச்சா, Call பண்ணீட்டாடா', என்று நமக்கு முன்பாகவே நமது குறிப்புகள் பிறர்க்குத் தெரிந்துவிடுகின்றன. (நன்றி: True Caller and Co). இன்று Mobile phone -ஓடு உறங்கி, அதன் முகத்திலேயே விழித்து, பல்துலக்குவதையும் படம்பிடித்துப் பிரகடனப்படுத்தி, லைக்குகளுக்காகவே பொய்யாய் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்று அடைமழையால் அருந்துபோன தொலைபேசி கம்பிகள் பழுதுபார்க்க வாரமே ஆனாலும் காத்திருந்தோம்; இன்றோ 3G சிக்னல் இல்லையென்றால் உலகமே பின்னோக்கி சுழல்வதுபோல் உணர்கிறோம். அன்று நமக்கான மைதானம் ஊரில் இருந்தது; இன்று Clash of clans, Pokemon Go-வாக கையளவில் சுருங்கிவிட்டது. இன்று WiFiக்கான தேடல், தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் போல் எங்கும் ஒலிக்கிறது. மொத்தத்தில் தொலைபேசிகள் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கத் தொடங்கும்போது, மனிதன் எட்ட இயலாத தூரத்தை அடைந்திருப்பான், மனம் என்பதனைக் காட்சிப்படுத்த மறந்து! நமது வாழ்வினை எளிமைப்படுத்தக் கண்டுபிடிக்கப் பட்டவை, நமது வாழ்வையே தட்டிப்பறிக்கத் துவங்கும்போது, விழித்துக்கொள்வதே நலம்!

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...